X

புற்றுநோய் இன்று உலகில் காணப்படும் பொதுவான நோய்களில் ஒன்றாகும்

அசாதாரணமான கலங்கள் கட்டுப்பாட்டை மீறி வளர்ச்சியடைவதால் புற்றுநோய் ஆரம்பிப்பதோடு மனித உடலின் எப்பகுதியிலும் இது ஏற்படலாம்.

அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்

நீரிழிவு என்றால் என்ன?

நீரிழிவு என்பது இரத்தத்தில் குளுக்கோஸ் (ஒரு வகையான சர்க்கரை) மட்டத்தின் உயர்வு காரணமாக ஏற்படும் வாழ்நாள் முழுதும் நீடிக்கும் ஒரு நோயாகும். நாம் உண்ணும் உணவின் அதிகமான அளவு சமிபாட்டு செயற்பாட்டின் இறுதியில் உச்ச அளவு பிரிகையாக்கப்பட்டு குளுக்கோசாக மாற்றப்பட்டே இரத்தத்தில் கலக்கின்றது. பின்பு இந்த குளுக்கோஸ் சக்தியைப் பிறப்பிப்பதற்கு தேவையான எரிபொருளாகப் பயன்படுத்தப்படுவதற்காக இரத்த ஓட்டத்தின் ஊடாக கலங்களுக்கு கடத்தப்படும். ஆரோக்கியமான மனிதர்களில், இரத்த ஓட்டத்திலிருந்து குளுக்கோசை கலங்களுக்கு எடுத்துச் செல்வதற்காக “இன்சுலின்” என்ற ஹோர்மோன் உதவும். அது கதவு ஒன்றைத் திறப்பதற்கு சாவி உதவுவது போல கலங்களுக்குள் நுழைவதற்காக செயற்படும். உங்களுக்கு நீரிழிவு இருந்தால், உங்கள் உடலானது கலங்களுக்கு குளுக்கோசை எடுத்துச் செல்வதற்குப் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாது அல்லது உடலிலுள்ள இன்சுலின் முறையாகத் தொழிற்படாது. ஆகவே உங்கள் இரத்தத்திலுள்ள குளுக்கோஸ் கலங்களுக்கு கொண்டு செல்லப்படாது. அதன் காரணமாக மிகையான குளுக்கோசுக்கு நடுவில் இருந்தாலும் உங்கள் உடலின் கலங்களால் அதனைப் பயன்படுத்த முடியாது, ஏனெனில் உள்ளே நுழைவதற்கு உதவும் சாவி சரியாகத் தொழிற்படாமையினால் ஆகும்.

நீரிழிவின் வகைகள்

நீரிழிவு முதலாம் நிலையானதாக அல்லது இரண்டாம் நிலையானதாக இருக்கலாம். இரண்டாம் நிலை நீரிழிவு அரிதானது, அது கல்லீரல் நோய், கனையம் சார்ந்த அல்லது அகச்சுரப்பி கோளாறுகள், குறிப்பிட்ட சில போதைப்பொருட்களின் பாவனை என்பவற்றால் ஏற்படுகிறது. முதலாம் நிலை நீரிழிவு இரு பிரதான குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

1 ஆம் வகை நீரிழிவு (Type I) - நீரிழிவு சனத்தொகையில் 10% ஐ கொண்டுள்ளது

2 ஆம் வகை நீரிழிவு (Type II) - நீரிழிவு சனத்தொகையில் 90% ஐ கொண்டுள்ளது

1 ஆம் வகை நீரிழிவு பொதுவாக இளம் வயதினரிடையே காணப்படுகிறது. இந்த வகையில், உடலில் இன்சுலின் பற்றாக்குறை காணப்படும். அதனால் எப்பொழுதும் இவர்களது சிகிச்சைக்காக இன்சுலின் மாற்றீடு செய்ய வேண்டியிருக்கும். இந் நோயாளர்கள் வழமையாக 20 வயதுக்கு குறைந்தவர்களாக காட்சியளிப்பதோடு, மெலிந்து எடை குறைந்தவர்களாக, அடிக்கடி சிறுநீர் கழிப்பதோடு தாகத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டவர்களாக இருப்பர். மேற்குறிப்பிட்ட அறிகுறிகளை அவர்கள் புறக்கணித்தால் அவர்களுக்கு ketoacidosis ஏற்படலாம்.

2 ஆம் வகை நீரிழிவு - இவ் இரண்டு வகைகளில் இதுவே அதிகளவு பொதுவானது என்பதுடன், வயதானவர்களிடையே, வழமையாக 40 வயதிற்கு மேற்பட்டவர்களிடம் காணலாம். அவர்கள் அநேகமாக நிறை அதிகமானவர்களாகவும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையுள்ள உணவுகளை அதிகம் எடுப்பவர்களாகவும் இருப்பார்கள். நோயின் ஆரம்பம் படிப்படியாகவும் அவதானிப்பதற்கு கடினமாகவும் இருப்பதனால் அவர்கள் தாமதமாகவே அறிந்துகொள்வார்கள். பின் மருத்துவ உதவிகளைப் பெறும்போது நோய் ஏற்கனவே சில உறுப்புகளைப் பாதித்திருக்கும்.

முன்நீரிழிவு (Prediabetes) என்றால் என்ன?

முன்நீரிழிவு என்பது பெயருக்கு ஏற்றவாறு நீரிழிவு ஏற்படுவதற்கு முன்னைய கட்டமாகும். 2 ஆம் வகை நீரிழிவுக்கு உள்ளாகும் அனைவரும் பெரும்பாலும் எப்பொழுதும் முன்நீரிழிவு கட்டமொன்றைக் கொண்டிருப்பார்கள். இதன்போது இவர்களது இரத்தத்திலுள்ள குளுக்கோசின் அளவு வழமையை விட அதிகமாக இருக்கும். எனினும், நீரிழிவு உள்ளது என அடையாளப்படுத்துவதற்கு போதுமானதாக இருக்காது.

முன்நீரிழிவு ஆனது முன்பு பலவீனமான குளுக்கோஸ் சகிப்புத்தன்மை என என அறியப்பட்டது.

நீரிழிவினால் ஏற்படும் சிக்கல்கள் என்ன?

உயர் இரத்த குளுக்கோஸ் மட்டங்கள் நீண்டநாள் நீடிப்பதாலேயே நீரிழிவு சிக்கல்கள் ஏற்படுகின்றன. உயர் இரத்த குளுக்கோஸ் மட்டங்கள் உடலின் பல பாகங்களுக்கு விநியோகத்தை மேற்கொள்ளும் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுதலை துரிதமாக்கலாம்.

இரத்தத்திலுள்ள சர்க்கரையை தீவிர கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் இவ்வாறான சிக்கல்கள் ஏற்படுவதை குறைக்கலாம். எனினும், அதிசிறந்த கட்டுப்பாடு பின்பற்றப்பட்டாலும் அனைத்து சிக்கல்களையும் முழுமையாக இல்லாதொழிக்க முடியாது. நீரிழிவு இருக்கும் காலத்துடன் சிக்கல்கள் உருவாகுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.

நீரிழிவு பிரதானமாக கண்கள், சிறுநீரகங்கள், நரம்புகள், பெரிய மற்றும் சிறிய இரத்த நாளங்கள் மற்றும் சருமத்தை பாதிக்கும்.

நீரிழிவு எதனால் ஏற்படுகின்றது?

நீரிழிவு உள்ள ஒருவரிடமிருந்து உங்களுக்கு நோய் தொற்றாது அத்துடன் நீங்கள் அதிகளவு சர்க்கரையை உணவில் சேர்ப்பதாலும் நீரிழிவு ஏற்படாது.

நீரிழிவு எதனால் ஏற்படுகின்றது என்பது பற்றி இதுவரை சரியாக தெரியாதுள்ளது. 1 ஆம் வகை நீரிழிவு இன்சுலினின் பற்றாக்குறையால் ஏற்படுகின்றது. இது கணையத்தில் இன்சுலினை பிறப்பிக்கும் கலங்கள் அழிவடைவதால் ஏற்படுகின்றது. கிருமித் தொற்றுகள் காரணமாக கணையக் கலங்கள் அழிவடையலாம். அத்துடன் சில நேரங்களில் இது தன்னெதிர்ப்பு தாக்கங்கள் அல்லது உடலின் சொந்த கலங்களின் தாக்கங்களின் பண்புகளாக இருக்கலாம்.

2 ஆம் வகை நீரிழிவு ஆனது மரபு ரீதியான இயற்சார்பு நிலை என்பதோடு, ஏனைய சூழல் காரணிகளான சுத்திகரிக்கப்பட்ட சீனி அதிகமுள்ள உணவுகள், சோம்பலான வாழ்க்கை முறை மற்றும் உடற் பருமன் என்பவற்றின் முன்னிலையில் ஏற்படுகின்றது.

உங்கள் பிள்ளைகளுக்கு நீரிழிவு ஏற்பட இடமுண்டா?

ஆம் மற்றும் இல்லை

உங்களுக்கு நீரிழிவு இருந்தால், உங்கள் பிள்ளைகளுக்கு நீரிழிவு ஏற்படும் சாத்தியம் அதிகமாகும். இச் சாத்தியம் நீரிழிவு உள்ள தாயுடன் (1:40 - 1:80) ஒப்பிடும்போது நீரிழிவு உள்ள தந்தையுடன் (1:20 -1:40) அதிகமாகும்.

குடும்பத்தில் ஒரு பிள்ளைக்கு நீரிழிவு இருந்தால், உடன் பிறந்தவர்களுக்கு நீரிழிவு ஏற்படுவதற்கு 1:20 சாத்தியமுண்டு.

பெற்றோருக்கு நீரிழிவு இருக்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பிள்ளைகளுக்கும் அது ஏற்படுவதில்லை என்பதையே இவற்றின் அர்த்தமாகும். எனினும் ஏனைய ஆபத்தான காரணிகளின் முன்னிலையில் அவர்களுக்கு நோய் ஏற்படும் சாத்தியம் அதிகமுண்டு.

நீரிழிவை குணப்படுத்த முடியுமா?

நீரிழிவை “குணப்படுத்துவதற்காக” பல்வேறு அணுகுமுறைகள் ஆராயப்பட்டு வருகின்றன. கணைய மாற்றுகை, செயற்கையான கணையத்தின் உருவாக்கம் என்பன சில. ஆனால் இவ் அனைத்து அணுகுமுறைகளும் பல சவால்கள் நிறைந்தது.

நீரிழிவு ஏற்படுவதைத் தடுக்க முடியுமா?

தொடர்ச்சியான உடற்பயிற்சி செயற்பாடுகள் மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் என்பன 2 ஆம் வகை நீரிழிவு ஏற்படும் சாத்தியத்தை குறிப்பிடத்தக்க அளவு குறைப்பதாக பல கற்கைகள் வெளிப்படுத்துகின்றன. இது உடற்பருமனுடன் தொடர்புடையதாகவும் அறியப்பட்டுள்ளது. சிலரிடம் 1 ஆம் வகை நீரிழிவை உருவாக்குவதற்கு முன்னிலையூட்டும் திருத்தமான மரபியல் மற்றும் “தூண்டிகளை” இனங்காண்பதில் ஆராய்ச்சியாளர்கள் முன்னேற்றம் கண்டு வந்தாலும், தடுக்கும் வழிமுறை மற்றும் தீர்வு என்பன இன்னும் அறியப்படாத ஒன்றாகவே உள்ளது.

நீரிழிவுக்கான சிகிச்சை என்ன?

வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் சிகிச்சை அவசியம்.

அனைத்து நீரிழிவு நோயாளர்களுக்கும் கட்டுப்பாடான உணவுப் பழக்கம் அவசியம். ஏனெனில், சிறந்த இரத்த சர்க்கரைக் கட்டுப்பாட்டை மருந்துகளால் மாத்திரம் உருவாக்க முடியாது. சில நோயாளர்களால் எவ்வித மருந்துகளின் தேவையுமின்றி உணவுப் பழக்கங்களால் மாத்திரம் சிறந்த சர்க்கரை கட்டுப்பாட்டை அடைய முடியும்.

1 ஆம் வகை (Type I) நீரிழிவு கொண்ட, 40 வயதுக்கு குறைந்த நோயாளர்களுக்கு வழமையாக இன்சுலின் மூலம் சிகிச்சை அளிக்கப்படும். ஏனையொருக்கு இரத்தத்திலுள்ள சர்க்கரையின் மட்டம், உடற்பருமன் வாழ்க்கை முறை என்பவற்றைக் கருத்திற்கொண்டு, நோயாளருக்கு ஏற்றவாறு, மாத்திரைகள் மூலம் சிகிச்சையளிக்கப்படும். கர்ப்பக் காலத்தில் மாத்திரைகள் முரண்பட்ட விளைவுகளைத் தரும்.

எனது இரத்தத்தில் சர்க்கரை உயரும்போது தோன்றும் அறிகுறிகள் என்ன?

உங்கள் இரத்தத்திலுள்ள சர்க்கரை உயரும்போது, நீங்கள் எப்பொழுதும் தாகமாக உணர்வதோடு அடிக்கடி சிறுநீர் கழிப்பீர்கள். அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான காரணம் இரத்தத்திலுள்ள மேலதிக சர்க்கரையை வெளியேற்றுவதற்காக ஆகும்.

சிறிது காலம் உங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயர்வாக இருந்தால், வழமைக்கு அதிகமான உணவின் மீது வெறுப்பு தோன்றுவதோடு, எடை குறைவடைந்திருப்பதையும் அவதானிப்பீர்கள். ஒருவர் சக்தி பற்றாக்குறை காரணமாக உயிரற்றதாகவும் களைப்பாகவும் உணர்வார். புண்கள் அல்லது குணமாகாத சருமத் தொற்றுகள் ஏற்படலாம் என்பதோடு, உங்களுக்கு அடிக்கடி சிறுநீர் தொற்றுகள் மற்றும் பங்கசு தொற்றுகள் ஏற்படலாம்.

எனது இரத்தத்தில் சர்க்கரை குறைவாக இருக்கும்போது தோன்றும் அறிகுறிகள் என்ன?

அவையாவன: பசி, படபடப்பு, நடுக்கம், வியர்த்தல், உறுத்துணர்ச்சி மற்றும் மயக்கமும் குழப்பமும் கொண்ட உணர்வு.

உடனடியாக உங்கள் இரத்தத்திலுள்ள சர்க்கரையை சரிபாருங்கள். 70mg/dl அல்லது அதற்கு குறைவாக இருப்பின்: நீங்கள் சிறிதளவு குளுக்கோஸ், சீனி கலந்த தேநீர் அல்லது பழச்சாறு அல்லது மென்பானத்தை எடுத்துக்கொள்வதோடு 15 நிமிடங்களின் பின்னர் மீண்டும் சரிபாருங்கள். இப்பொழுதும் உங்கள் இரத்தத்தின் சர்க்கரை குறைவாக இருந்தால், மேற்குறிப்பிட்டவற்றை மீண்டும் செய்வதோடு சர்க்கரையின் அளவு குறிப்பிட்ட மட்டத்தை அடையும் வரை ஏதேனும் சிற்றுண்டிகளை சாப்பிடுங்கள். உடனடியாக செயற்படாவிட்டால் உங்களுக்கு கோமா நிலை ஏற்பட இடமுண்டு. அதனால், உங்களுக்கு மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் தோன்றி உங்களது இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை சரிபார்க்க வழி இல்லாவிட்டால் ஏதும் யோசிக்காமல் சர்க்கரை அடங்கிய ஏதேனும் உணவை உட்கொள்ளுங்கள்.

2 ஆம் வகை (Type II) நீரிழிவு எதனால் ஏற்படுகிறது?

2 ஆம் வகை நீரிழிவு எதனால் ஏற்படுகிறது என்பதற்கான எளிய காரணம் எதுவுமில்லை. உதாரணமாக சர்க்கரை உண்பதால் நீரிழிவு உருவாகாது. அதிகளவு சர்க்கரை மற்றும் ஏனைய கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வது எடை அதிகரிப்பை ஏற்படுத்தலாம். நீரிழிவுக்கு உள்ளாகும் அதிகமானோர் நிறை கூடியவர்களே. உடற்பருமன், ஒருவரது நீரிழிவு ஏற்படும் சாத்தியத்தை ஏன் அதிகரிக்கிறது என விஞ்ஞானிகள் இன்னும் முழுமையாக அறியவில்லை. எனினும், 2 ஆம் வகை நீரிழிவுக்கு உடற்பருமன் ஒரு முக்கிய காரணி என அவர்கள் நம்புகிறார்கள். இவ் ஒழுங்கின்மை ஏன் ஏற்படுகிறது மற்றும் உடற்பருமன் ஏன் ஒரு முக்கிய ஆபத்துக் காரணியாக இருக்கிறது என்பதையும் அறிய தற்போதைய ஆராய்ச்சிகள் உதவலாம்.

இன்சுலின் எதிர்ப்பே நீரிழிவை ஏற்படுத்தும் பிரதான காரணியாகும். இன்சுலின் எதிர்ப்பு ஏற்படுவதற்கான காரணிகளை விஞ்ஞானிகள் தற்பொழுதும் ஆராய்ந்து வருவதோடு, அவர்கள் இரு சாத்தியங்களை கண்டறிந்துள்ளார்கள். முதலாவது சாத்தியம் கலங்களிலுள்ள இன்சுலின் ஏற்பிகளின் ஒரு குறைபாடாக இருக்கலாம். அதாவது மின்னுபகரணம் இயங்குவதற்கு மின் வழங்கி ஒன்றுடன் பொருத்தப்பட வேண்டும் என்பதைப் போன்று, இன்சுலின் செயற்படுவதற்காக ஏற்பியுடன் பொருந்துதல் வேண்டும். ஏற்பிகளில் பல கோளாறுகள் ஏற்பட இடமுண்டு. இன்சுலிடன் பொருத்தப்படுவதற்கு போதுமான ஏற்பிகள் இல்லாமல் இருக்கலாம், அல்லது ஏற்பியில் உள்ள ஏதேனும் குறைபாடு இன்சுலின் பொருந்துவதைத் தடுக்கலாம்.

இரண்டாவது சாத்தியம் இன்சுலின் ஏற்பியுடன் இணைந்த பிறகான செயன்முறையை உள்ளடக்கியது. இன்சுலின் ஏற்பியுடன் இணைந்தாலும், சர்க்கரையை உயிரியல் மாற்றம் செய்வதற்கான சமிக்ஞையை கலங்கள் புரிந்து கொள்ளாமை. இது ஏன் நடைபெறுகிறது என்பதை அறிந்திட விஞ்ஞானிகள் கலங்களை ஆராய்ந்து வருகிறார்கள்.

2 ஆம் வகை நீரிழிவு யாருக்கு உருவாகிறது?

வயது, பாலினம், நிறை, உடற்பயிற்சி செயற்பாடுகள், உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை, மற்றும் குடும்பத்தின் உடல்நல தரவுகள் இவை யாவுமே ஒருவருக்கு 2 ஆம் வகை நீரிழிவு ஏற்படுவதற்கான வாய்ப்பில் தாக்கம் செலுத்துகின்றன. ஒருவரது பெற்றோர் அல்லது உடன் பிறந்தவர்களுக்கு நீரிழிவு இருப்பின் அவருக்கு நீரிழிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். வெள்ளையர்களை விடவும் ஆபிரிக்க அமெரிக்கர்கள், ஸ்பெனிக்ஸ், பாரம்பரிய அமெரிக்கர்கள் மற்றும் பாரம்பரிய ஹவாயன்களிடம் நீரிழிவு பொதுவாக இருப்பதை இப்பொழுது நிபுணர்கள் கண்டறிந்துள்ளார்கள். இதற்கு பாரம்பரியம் மற்றும் உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை போன்ற சூழல் காரணிகள் இரண்டுமே காரணமாக அமைவதாக அவர்கள் நம்புகிறார்கள். உலகிலேயே அதிகளவு நீரிழிவு வீதம் பீமாஸ் என அழைக்கப்படும் அமெரிக்க இந்தியர்களைக் கொண்ட அரிஸோனா சமூகத்தினரிடம் காணப்படுகிறது. நீரிழிவு ஏற்படும் சாத்தியம் வயதுடன் அதிகரித்தாலும் பாலினம் ஒரு ஆபத்துக் காரணி அல்ல. ஆபிரிக்க அமெரிக்க ஆண்களை விடவும் ஆபிரிக்க அமெரிக்க பெண்களுக்கு நீரிழிவு அதிகம் பாதிக்கிறது.

தமது குடும்ப வரலாறு, வயது, அல்லது இனம் என்பவற்றை மக்களால் மாற்ற முடியாத போதும் நிறை மற்றும் உடல் வலிமை என்பவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது சாத்தியமானது. நீரிழிவு ஏற்படும் சாத்தியம் ஒருவருக்கு இருப்பதை மருத்துவரால் முடிவு செய்ய முடிவதோடு, அந்த நிலமையை குறைப்பதற்கு அவரால் அறிவுறுத்தல் வழங்க முடியும்.

logo