100 க்கு மேற்பட்ட நோய்களைக் கொண்ட தொகுதியின் பொதுப் பெயரே புற்றுநோயாகும். வெவ்வேறு வகை புற்றுநோய்கள் காணப்பட்டாலும் அனைத்து புற்று நோய்களும் அசாதாரணமான கலங்கள் கட்டுப்பாட்டை மீறி வளர்ச்சியடைவதாலேயே ஆரம்பிக்கிறது. சிகிச்சையளிக்கப்படாத புற்று தீவிரமான சுகயீனத்தையும் மரணத்தையும் ஏற்படுத்தலாம்.
உடலானது ட்ரில்லியன் எண்ணிக்கையிலான உயிருள்ள கலங்களால் ஆக்கப்பட்டுள்ளது. சாதாரண கலங்கள் வளர்ச்சியடையும், பிரிகையடைந்து புதிய கலங்களை உருவாக்கும், அத்துடன் விதிக்கப்பட்ட முறையின் கீழ் இறக்கும். ஒருவரது வாழ்வின் ஆரம்ப வருடங்களில் சாதாரண கலங்கள் வேகமாக பிரிகையடைந்து அவர் வளர்வதற்கு அனுமதியளிக்கும். அவர் வயது வந்த ஒருவரானதும் நலிவடைந்த அல்லது இறக்கும் கலங்களை பிரதீயீடு செய்வதற்கு அல்லது காயங்களை சீரமைப்பதற்கு மாத்திரமே அதிகளவு கலங்கள் பிரிகையடையும்.
உடலின் ஒரு பாகத்தில் கட்டுப்பாட்டை மீறி கலங்கள் வளர்ச்சியடையும் போதே புற்றுநோய் ஆரம்பிக்கிறது. புற்றுநோய் கலங்களின் வளர்ச்சி சாதாரண கலங்களின் வளர்ச்சியில் இருந்து வேறுபட்டது. இறப்பதற்கு பதிலாக, புற்றுநோய் கலங்கள் தொடர்ந்து வளர்ச்சியடைந்து மேலும் புதிய, அசாதாரணமான கலங்களை உருவாக்குகின்றன. புற்றுநோய் கலங்களால் ஏனைய இழையங்களாக வளர்ச்சியடைய முடியும் என்பதோடு, சாதாரண கலங்களால் அவ்வாறு வளர முடியாது. கட்டுப்பாட்டை மீறி வளர்ச்சியடைதல் மற்றும் ஏனைய இழையங்களாக உருமாற்றம் பெறல் என்பனவே ஒரு சாதாரண கலத்தை புற்றுநோய் கலமாக மாற்றுகின்றன.
DNA இல் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகவே கலங்கள் புற்றுநோய் கலங்களாக மாறுகின்றன. DNA ஒவ்வொரு கலத்திலும் இருப்பதோடு அதுவே கலத்தின் அனைத்து தொழிற்பாடுகளையும் கட்டுப்படுத்துகின்றது. சாதாரண கலமொன்றில், DNA பாதிப்படையும்போது கலம் அதனை நிவர்த்தி செய்யும் அல்லது இறக்கும். புற்றுநோய் கலங்களில், பாதிக்கப்பட்ட DNA சரி செய்யப்படாது, ஆனால் கலம் உரிய முறையில் இறக்காது. பதிலாக, உடலுக்கு தேவையில்லாத புதிய கலங்களை உருவாக்கத் தொடங்கும். இப் புதிய கலங்கள் அனைத்துமே முதலாவது கலத்தை ஒத்த பழுதடைந்த DNA இனை கொண்டிருக்கும்.
ஒருவர் அசாதாரணமான அல்லது பழுதடைந்த DNA இனை மரபுவழியாகக் கொண்டிருக்கலாம். (அவரது பெற்றோரில் இருந்து கடத்தப்பட்டிருக்கலாம்), ஆனால் அதிகமான DNA பழுதுகள், சாதாரணமான கலம் இனப்பெருக்கம் செய்யும்போது அல்லது சூழல் காரணிகளில் ஏற்படும் தவறுகளாலேயே ஏற்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில் பொதுவான செயல்களான சிகரட் புகைத்தல் அல்லது சூரிய ஒளி போன்றவற்றாலும் DNA பாதிப்புகள் ஏற்படலாம். எவ்வாறாயினும் ஒருவரது புற்றுநோய்க்கு ஏதுவான சரியான காரணியை அறிவது கடினமானது.
அதிகமான நிலைமைகளில் புற்றுநோய் கலங்கள் கட்டியொன்றை உருவாக்குகின்றன. காலம் செல்லும்போது, கட்டிகள் அருகிலுள்ள சாதாரண இழையத்தை தாக்கலாம், அதன்மீது பரவலாம் அல்லது ஒருபுறமாகத் தள்ளலாம். லியூக்கேமியா போன்ற சில புற்றுநோய்கள் அரிதாகவே கட்டிகளை உருவாக்குகின்றன. பதிலாக, இப் புற்றுநோய் கலங்கள் குருதி மற்றும் குருதியைப் பிறப்பிக்கும் கலங்களில் கலந்து அவை உருவாகும் ஏனைய இழையங்களில் சுற்றுகின்றன.
புற்றுநோய் கலங்கள் தாம் வளர்ச்சியடையக்கூடிய மற்றும் சாதாரண இழையங்களை மூடி கட்டிகளை உருவாக்கக்கூடிய உடலின் ஏனைய பாகங்களுக்கு அடிக்கடி பயணிக்கின்றன. இது உடலின் இரத்த ஓட்டத்தில் அல்லது நிணநீர் நாளங்களில் புற்றுநோய் கலங்கள் புகும்போது நடைபெறுகிறது. புற்றுநோய் பரவும் இச் செயன்முறை மெட்டாஸ்டெடிஸ் என அழைக்கப்படுகின்றது.
புற்றுநோய் எங்கு பரவினாலும், எப்பொழுதும் அது ஆரம்பித்த இடத்தை அடிப்படையாகக் கொண்டே பெயரிடப்படும். உதாரணமாக, ஈரலுக்கு பரவலடைந்த பெருங்குடல் புற்று, மெட்டாஸ்டெடிஸ் பெருங்குடல் புற்று என்றே அழைக்கப்படும். மாறாக, ஈரல் புற்று என்று அழைக்கப்படாது. இந் நிலமையில் ஈரலிலுள்ள புற்றுநோய் கலங்கள் பெருங்குடலில் உள்ள கலங்களை ஒத்தவையாக இருக்கும். அத்துடன், அவற்றுக்கு அதே முறையிலேயே சிகிச்சை அளிக்கப்படும்.
வெவ்வேறு வகை புற்றுகள் வெவ்வேறு விதமான நடத்தையை வெளிப்படுத்துகின்றன. உதாரணமாக, நுரையீரல் புற்று மற்றும் தோல் புற்று என்பன ஒன்றுக்கொன்று அதிக வேறுபட்ட இரு நோய்கள். அவை வெவ்வேறு வீதங்களில் வளர்ச்சியடைவதோடு வெவ்வேறு சிகிச்சைகளுக்கே பதிலளிக்கின்றன. இதன் காரணமாகவே புற்றுநோயால் பாதிப்படைந்தவர்களுக்கு அவர்களது புற்றுநோய் வகையை இலக்காகக் கொண்ட சிகிச்சை அவசியம்.
கட்டி என்பது கலங்களின் அசாதாரணமான திரட்சி அல்லது தொகுதி ஆகும். எனினும் அனைத்து கட்டிகளும் புற்று அல்ல. புற்றுநோய் அல்லாத கட்டிகள் benign என அழைக்கப்படுகின்றன. benign கட்டிகள் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் - அவை மிகப் பெரியவையாக வளர்ச்சியடைந்து நலமான உறுப்புகள் மற்றும் இழையங்களை அழுத்தலாம். ஆனால் அவற்றினால் ஏனைய இழையங்களுக்குள் வளர்வதற்கு (தாக்குவதற்கு) முடியாது. அத்துடன் அவற்றால் உடலின் ஏனைய பகுதிகளுக்குள் ஊடுருவி படர்வதற்கு முடியாது. அத்துடன் இவற்றால் உடலின் ஏனைய பகுதிகளுக்கு பரவ முடியாது. இக் கட்டிகள் மிக அரிதாகவே உயிருக்கு ஆபத்தானவை.
புற்றுநோயை அதன் ஆரம்பக் கட்டத்திலேயே இனங்கண்டு சிகிச்சையளிக்கப்பட்டால் அநேகமான வகை புற்றுநோய்களை குணமாக்கும் சாத்தியமுண்டு. ஆரம்பத்திலேயே இனங்காணப்படும் போது அவை சிறியவையாக காணப்படுவதனால் அவற்றை அறுவை சிகிச்சை ஒன்றினால் இலகுவாக நீக்குவதற்கு அல்லது கெமோதெரபி அல்லது கதிரியக்க சிகிச்சையின் மூலம் சுருக்குவதற்கு முடியுமாக இருக்கும். எனினும், தீவிரமான புற்றுநோய்களும் சிகிச்சை வழங்கப்பட்டு குணமாக்கப்பட்டுள்ளன.
மூலம் - அமெரிக்க புற்றுநோய் கழகம்